வேலூரில் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது காதலியை சந்திப்பதற்காக இரவில் பர்தா அணிந்து காத்துக் கொண்டிருக்கும்போது ஊர் பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அன்பழகனுக்கு ஏற்கனவே திருமணமானவர். ஆனால், இந்த தகவலை மறைத்து வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் பிரிவில் வேலை செய்யும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு வயது 19 என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்து வீடு திரும்பிய தனது காதலியை சந்திக்க பெரும்பாலும் பெண்கள் அணியும் பர்தாவை அன்பழகன் அணிந்துள்ளார். இரவு நேரத்தில் நட்டநடு வீதியில், நகைச்சுவை நடிகனைப் போல் உடல்குழைவும் நெகிழ்வும் மிகுந்த ஓசிந்த உடலாய்த் தோற்றங்கொண்டிருக்கிறார். இவரது உடல் மொழியையும், காலில் அணிந்திருந்த ஆண் காலணியையும் கண்ட பொது மக்கள் அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.
ஒருகட்டத்தில், பர்தாக்குள் இருப்பது ஆண் என்பதைக் கண்டறிந்த ஊர் மக்கள், அவனை திருடன் என்ற சந்தேகிக்க தொடங்கியுள்ளனர். ஊர் மக்களின் சந்தேகத்தை தணிக்கும் அன்பழகனின் முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரம் கைகலப்பு தகராராக மாறியது. நமது வேலூர் நாயகன் தர்ம அடி வாங்கியுள்ளார்.
தமிழ் படங்களில் வரும் இறுதிக்காட்சியைப் போல், மிகச்சரியான நேரத்தில் வேலூர் வடக்கு காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். விசாரணையில் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த அன்பழகனை, வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நகைச்சுவைகள் ஒருபுறமிருக்க, பொதுவாக தமிழ் சமூகத்தில் காதலன் என்பவனின் உடல் தோற்றம் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விரைப்பை கொண்டவாராக கற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அன்பழகன் திருமணம் என்ற சமூக கட்டமைப்பை மட்டும் தாண்டவில்லை, பெண்ஆண் என்கிற பாலின வேறுபாட்டின் திடத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். அதற்கு, விலையாக சில காயங்களையும் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:
News Headlines: ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி... பதவியேற்பு... இன்று இந்தியா மேட்ஜ்... இன்னும் பல!