வெளிநாடு வாழ் இந்தியர் திருமணப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள தனது மனைவி விவாகரத்து வழங்காத காரணத்தினால்,பிரபல மேட்ரிமோனி வளைதள ஒன்றில் அவருக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

  


இந்த முரண்பாடான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஓம்குமார். திருவள்ளூர் வட்டாரத்தில் அமைந்துள்ள  வெள்ளியூர் ஊராட்சியில் வசித்து வருகிறார். பட்டதாரி என்று அறியப்படுகிறது. இவருக்கும்,  திருவள்ளூர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் கடந்த கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவி கணிணி மென்பொருள் பொறியாளராக பணி செய்து வருகிறார்.  இந்நிலையில், ஜான்சிக்கு அமெரிக்காவில் பணி செய்ய வாய்ப்புக்  கிடைத்ததையடுத்து, கணவன் – மனைவி இருவரும் அமெரிக்கா சென்றனர். இருப்பினும், அமெரிக்காவில் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கிய காரணத்தினால், ஓம்குமார் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான வெள்ளியூருக்குத் திரும்பினார்.


கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஓம்குமார் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கூடுதலாக பால் வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்சியிடம் இருந்து விவகாரத்து கேட்டு ஓம்குமார்  பூந்தமல்லியில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. 


 






இந்நிலையில், பிரபல மேட்ரிமோனி வளைத்தளத்தில் ஜான்சிக்கு நல்ல மணமகன் தேவை என்ற தகவலை ஓம்குமார் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆன்லைன் தளத்தில் இந்த தகவலை பார்த்த சிலர், ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவரது தந்தையான பத்மநாபனை தொடர்பு கொண்டனர். 


பத்மபாபன் முதலில் இந்த அழைப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் எந்த இணையதளத்திலும் விளம்பரம் செய்யவில்லை என்று எடுத்துக் கூறி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பெருங்கோபமும்,விரக்தியும் அடைந்த அவர் பிரச்சனையின் தீவிரத்தன்மையையும் உணர ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, இணையத்தில் தனது மகளின் திருமண நிலையை விளம்பரப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்நிலைத்தில் புகார் செய்தார்.


திருவள்ளூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, இதுகுறித்து கூறுகையில், "விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளி ஓம்குமார் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.