தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் முத்துக்குமார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் சரவணப் பொய்கைப் பகுதி நுழைவு வாயிலில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, நுழைவு வாயிலின் அருகில் உள்ள மணி அய்யர் ஹோட்டல் முன்பு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணின்  உதவியாளரான கிருபாகரன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் சென்றுள்ளார். அப்போது, கோயிலின் உள் பகுதியில் இருந்தது வெளியே செல்வதற்காக கார்கள் வரிசையாக க்யூ கட்டி நின்றுள்ளன. அமைச்சரின் உதவியாளரின் வாகன டிரைவர் குமாரிடம் காரை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி சற்று ஓரமாக நிறுத்தும்படிச் சொன்னதற்கு கார் டிரைவருக்கும், போக்குவரத்து தலைமைக் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


                                  

 

இதையடுத்து, அந்த டிரைவர் அமைச்சரின் உதவியாளர் கிருபாவிடம் சொல்ல, தலைமைக் காவலரை அழைத்த கிருபா, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதையடுத்து காரை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய தலைமைக்காவலர் முத்துக்குமார், அமைச்சரின் உதவியாளர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது என போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டுப் கேட்டபோது,  ‛திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் டோல்கேட் முன்பு டிராபிக்கை ஒழுங்குபடுத்துவது தான் என்னோட பணி. எப்பவும் போல டிராபிக்கை க்ளியர் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த ரோட்டுல உள்ள மணி அய்யர் ஹோட்டல் முன்னால, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவி காரை (TN 43G 8969 எண் கொண்ட யுன்னோவா) நிறுத்திட்டு அமைச்சரின் உதவியாளர் கிருபா ஹோட்டலுக்குள் போனார். காரை டிரைவர், ஓரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்தினார். அந்த ரோடு குறுகலான ரோடுங்கிறதுனால கோயில்ல இருந்து உள்ளே போகுற கார்கள், வெளியே வர்ற கார்கள்னு எப்பவுமே டிராபிக்காத்தான் இருக்கும்.


                                  

இந்த நிலையிலதான் மணி அய்யர் ஹோட்டலுக்கு முன்னால நடுரோட்டுல அமைச்சரின் உதவியாளர் கார் நிறுத்தப்பட்டிருந்துச்சு. அதனால கோயில்ல இருந்தது வெளியே வர்ற கார்கள் வரிசையாக நிக்க ரொம்ப டிராபிக் ஆயிட்டு. அதனால் காரோட டிரைவர் குமார்ட்ட போய்,  சார் காரை கொஞ்சம் ஓரமா நிப்பாட்டுங்க. பின்னால பாருங்க. எவ்வளவு கார் வரிசை கட்டி நிற்குதுன்னு. ரொம்ப டிராபிக் ஆயிடும்னு சொன்னேன். ஆனா, அவர், ‘காரை எடுக்க முடியாது. உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. டிராபிக் ஆனா எனக்கு என்ன?” எனச் சொன்னார் டிரைவர். பக்கத்துல உள்ள ஆட்டோ டிரைவர்கள் வந்து ,என்னப்பா இப்படி மரியாதை இல்லாமப் பேசலாமான்னு சொல்லி அவரை அனுப்பினார்கள். உடனே ஹோட்டலுக்குள்ள போனவர் கிருபாகரனிடம் என்ன சொன்னார் எனத் தெரியலை. வேகமாக நடந்து வந்தவர், “என் டிரைவரை எப்படி காரை எடுத்து தள்ளி நிப்பாட்டச் சொல்லலாம்” எனச் சொல்லி கோபமாகப் பேசி என்னோட இடது கன்னத்துல ஒங்கி அறைந்தார். 

அதில் என் கண்ணாடி கீழே விழுந்தது. காரை ஓரமா நிறுத்துங்கன்னு சொன்னது தப்பா சார். உடனே, திருச்செந்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்ல கிருபா மேல கம்ப்ளைண்ட் கொடுத்தேன். கம்ப்ளைண்ட வாங்கி மட்டும் வச்சாங்க. இடைல எஸ்.பி ஆபிசில் இருந்து போன் பண்ணி ஸ்டேஷனுக்கு போங்கன்னு சொல்லவும் ஸ்டேஷன் போனேன் அங்க போய் கொஞ்ச நேரத்துல, கிருபாகரன் ஸ்டேசன் வந்தாரு. அடிச்சது தப்புதான்னு மன்னிப்பு கேட்டாரு. மன்னிப்பு கேட்ட பிறகு எதுக்கு கம்ளைண்ட்னு வாபஸ் வாங்கிட்டேன்” என்கிறார். 


                                  

அனிதா அண்ணாச்சியின் உதவியாளர்களில் கிருபா ரொம்ப நல்லவர் எனக்கூறும் அனிதா ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ ஆபிஸுக்கு மனு கொடுக்க வந்த எல்லாத்துக்குமே கிருபாவைப் பற்றித் தெரியும்,அடிக்கிற அளவுக்குப் போகமாட்டார். ஆனா, என்ன மனநிலையில கை ஓங்கிட்டார்னு தெரியல என்கின்றனர்.


                                  

இந்த டிரைவர் பேசாம வண்டி எடுத்து இருந்தார்ன்னா இந்த பிரச்சினையே வந்திருக்காது என கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள், இவர் போய் கிருபாவிடம் ( கிருபாகரனை கிருபா என்றே சொல்வது உண்டு) என்னத்தையோ குண்டக்க மண்டக்க சொல்ல அவர் கோபத்தில் கைய ஓங்கி அடிச்சிட்டார் என்கின்றனர் ஆட்டோ டிரைவர்கள் .

 

போக்குவரத்து காவலர் சொன்னத புரிஞ்சிக்காம  கன்னத்தில் பளார் விட்டது குத்தம் தானே என்கிறார்கள் காவலர்கள்.


                                  

இதற்கிடையில் இந்து முன்னனி அமைப்பினர் , காவலருக்கு அடி உதை இது தான் விடியல் அரசான்னு கையெழுத்து பிரதியை திருச்செந்தூரில் ஒட்ட துவங்கி உள்ளனர்.