சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்மில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காணாதவகையில் இந்த கொள்ளைச்சம்பவம் அமைந்துள்ளது. 


சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள எஸ்.பி ஐ வங்கி ஏடி.எம்மில் பணம் கொள்ளை போனதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில் இருவர் பணத்தை எடுத்து செல்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. இதனால் குழப்பம் அடைந்த வங்கி அதிகாரிகள் ஏதோ தில்லுமுல்லு நடப்பதாக உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபோன்ற கொள்ளை செனாய் நகரில் மட்டுமே நடந்ததாக நினைத்த நிலையில் வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்பாக்கம், வேளச்சேரி என இந்த கொள்ளைச் சம்பவம் ஒரே நாளில் தொடர்ந்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎமை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




நடந்தது என்ன?


நடந்தது என்னவென்றால் சொந்த அக்கவுண்டில் இருந்த பணத்தைத் தான் எடுத்துள்ளனர். ஆனால் அக்கவுண்டில் இருக்கும் பணம் குறையவே இல்லை. அதாவது, ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடி.எம்மில் ஏடி.எம்.கார்டை பயன்படுத்தி பாஸ்வேர்டை டைப் செய்தால், நாம் பதிவிட்ட பணம் வெளியே வரும். ஆனால் 20 நொடிக்குள் பணத்தை எடுக்கவில்லையென்றால் 20 நொடிக்குள் உள்ளே சென்றுவிடும். பணம் அக்கவுண்டில் இருந்து சென்றுவிட்டதா? அல்லது ஏடிஎம்க்குள் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஏடிஎம் மெஷினில் ஒரு சென்சார் இருக்கும். இதனை தெளிவாக தெரிந்துகொண்ட கும்பல் பணத்தை எடுத்துவிட்டு சென்சாரையும் மறைத்துவிடுவார்கள். இதனால் பணம் மீண்டும் அக்கவுண்டில் வந்துவிட்டது என ஏடிஎம் நினைத்துக்கொள்ளும். அக்கவுண்டில் இருந்து பணம் குறையாது. ஆனால் ஏடிஎம்ல் இருந்து அந்தக்கும்பல் பணத்தை எடுத்துச்செல்லும். கொள்ளையடித்தவர்கள் போலீயான முகவரியை வைத்து வங்கிக்கணக்கு தொடங்கி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




எஸ்பிஐ குறிவைக்கப்பட்டது ஏன்?


இந்த திருட்டு குறிப்பாக எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மெஷினில் மட்டுமே நடந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் பணம் வெளியே வரும் இடத்திலேயே சென்சார் இருப்பது இந்த ஒரு வங்கியின் ஏடிஎம் மட்டுமே. மற்ற வங்கி ஏடிஎம்களில் சென்சார் வேறு இடத்தில் இருப்பதால் சென்சாரை மறைக்க முடியாது. இந்த லூப் ஹோலை பயன்படுத்திய கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை தேடி தேடி கொள்ளையடித்துள்ளனர்.


இந்த நிலையில் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏடி.எம் மிஷினில் பணம் எடுப்பதற்கு எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது. கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மத்திய குற்றப்பிரிவு வங்கி தடுப்பு போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்றும், கொள்ளையடித்துவிட்டு ஹரியானாவில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனிப்படைபோலீசார் ஹரியானா விரைந்துள்ளனர். மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


'நான் என்ன வெதர்மேனா?' - ஆஸி., கிரிக்கெட் விமர்சகர்கள் வரை ரீச் ஆன பிரதீப்ஜான்!