தெலுங்கானா மாநிலம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் பாதிரியாராக ஊழியம் செய்து வருபவர் பாலசாமி.  இவரது வீட்டில் 40 வயதான மாரியம்மா என்பவர் வீட்டுவேலைகளுக்காக பணியமர்த்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 15  ஆம் தேதி பாலசுவாமி தனது வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் திருடு போய்விட்டதாக புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கடந்த 17 ஆம் தேதி மாரியம்மாவை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் மாரியம்மா உயிரிழந்துள்ளார்.


இது குறித்து அம்மாநில பட்டியலின பிரிவு காங்கிரஸ் தலைவர் நாகரிகரி ப்ரீதம் கூறும் போது, “ குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி கம்மம் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் அட்டாகுடுர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பேரில் மாரியம்மா கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஜூன் 17 ஆம் தேதி இரவு காவல்துறையினர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 


இந்த தாக்குதலில் சுயநினைவை இழந்த  மாரியம்மா அடுத்த நாள் உயிரிழந்தார். இந்தச்சம்பவத்தை அதிகாரிகள் மறைக்க முயற்சிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இவருடன் சேர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் மாரியம்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள் ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை விசாரணை முடியும் வரை பணியிடைநீக்கம் செய்துள்ளார். 


இது தொடர்பாக டிசிபி நாராயண ரெட்டி கூறும் போது,  “ கைது செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு உட்ப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.


முன்னதாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட  தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ஜெயராஜ்ஜின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையையும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.