கொரோனா ஊரடங்கு காலத்தில் பல கட்டுப்பாடுகளை தாண்டி திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு திருமணம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை ஒருவர் திருமணம் செய்துள்ளது தான் அதற்கு காரணம். எப்படி இந்த திருமணம் நடந்தது?


தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் கென்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த அர்ஜூன் என்ற இளைஞர் பிஎட் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவர் அரசாங்க வேலைக்கான தேர்வுகளுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவருடைய அத்தை மகளான உஷா ராணிக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் மற்றொரு அத்தை மகளான சுரேகாவை பார்த்தவுடனும் இவருக்கு காதல் வயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து முதலில் இந்த இரு பெண்களிடம் முதலில் அர்ஜூன் பேசி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதன்பின்னர் இந்த இரு பெண்களையும் இவர் 5 மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜூனின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்க்க தொடங்கியுள்ளனர். 




அந்த சமயத்தில் இந்த இரண்டு பெண்களையும் காதலிப்பதாக அர்ஜூன் தனது வீட்டில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரின் பெற்றோர்கள் இரண்டு பெண்களின் வீட்டிலும் பேசியுள்ளனர். அத்துடன் உஷா ராணி மற்றும் சுரேகா ஆகிய இருவரிடமும் இது தொடர்பாக பெற்றோர்கள் பேசியுள்ளனர். இருவரும் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளனர். இதனால் ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களையும் அர்ஜூனிக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கடந்த 14ஆம் தேதி திருமண ஏற்பாடை செய்துள்ளனர். அங்கு ஒரே மண்டபத்தில் அர்ஜூன் உஷா ராணி மற்றும் சுரேகா ஆகிய இரண்டு பெண்களையும் திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இத்திருமணம் தொடர்பாக பேசிய அந்த ஊரின் தலைவர், “எங்கள் பழங்குடியின வழக்கப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்று. அதேபோன்று தான் இந்த திருமணமும் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த இரண்டு பெண்களின் சம்மதம் கேட்ட பிறகு தான் இத்திருமணம் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.  பழங்குடியின மக்கள் சிலரின் சமூக முறைப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம்  செய்ய அனுமதி உண்டு. ஆகவே இந்த பழங்குடியின இளைஞரின் திருமணம் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த திருமணம் சம்பவம் செய்தி தற்போது பெரும் ஆச்சரியம் மற்றும் வரவேற்பை பெற்று வருகிறது. 


மேலும் படிக்க: அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?