சென்னை அடுத்த பல்லாவரம் அருகில் உள்ள  அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் , கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அவ்வப்பொழுது காவல்துறையினருக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து பலமுறை காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு, கஞ்சாவிற்பனை செய்பவர்கள் குறித்து ரகசிய தகவல்களை சேகரித்து வந்துள்ளனர். இதனை அடுத்து நேற்று அப்பகுதியை காவல் துறையினர் நோட்டமிட்டதில் மூன்று பேர் அப்பகுதியில், கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதனை அடுத்து அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் , கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

 

சிக்கிய ' பார்ட் டைம் ' கஞ்சா வியாபாரி

 

பிடிபட்ட மூன்று பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வடபழனி, கே.கே. நகர், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அஜய், பூந்தமல்லி, சுமித்ரா நகர் 3-வது தெருவை சேர்ந்த மரிய அந்தோணி செல்வம், மற்றும் போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான விஷ்ணு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். விஷ்ணு சாஃப்ட்வேர் இன்ஜினியராக, வேலை செய்து கொண்டே கஞ்சாவிற்பனையிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. விஷ்ணு சென்னை ஓஎம்ஆர் இல் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் , சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கும்மிடிபூண்டியில்  36 கிலோ கஞ்சா பறிமுதல்

 

மற்றொரு வழக்கு சென்னை கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து பெருவாயல் பகுதிக்கு வந்த மாற்றுத்திறனாளி வாகனம் ஒன்றை நிறுத்தி,  விசாரித்தனர். அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில், 36 கிலோ எடை கஞ்சா கடத்தியது தெரியவந்தது. வாகனத்துடன் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்திய மனோஜை கைது செய்தனர். விசாரணையில், அவர் ஒன்றரை மாதமாக பெருவாயல் பகுதியில் வசித்து வருவதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி, சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிந்தது.