டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நிட் தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.


ஆளுநர் டெல்லி பயணம்:


திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்த சூழலில் ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வரும் 20-ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கையெழுத்து போடமாட்டேன் - ஆளுநர்


அண்மையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என பெற்றோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆளுநர் “நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போடமாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டங்களை படித்தாலே மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம்” என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


மாணவர் தற்கொலை:


இந்த சூழலில் தான் சென்னை அடுத்த குரோம்பேட்டயை சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவர், நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ கனவு கலைந்துவிட்டதாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்கம் தாளாமல் அவரது தந்தையும் மறுநாளே தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர் மாணவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.


திமுக உண்ணாவிரத போராட்டம்:


தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆளுநர் ரவி, திடீர் பயணமாக டெல்லி விரைந்துள்ளார். அங்கு, முக்கிய அதிகாரிகளை சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.