திருக்கோவிலூர் அருகே முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே கடத்தப்பட்ட 3,840 மது பாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பொது முடக்கம் இருக்கும் சூழலில், ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் வலம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வோரை மட்டும் அனுமதித்த போலீஸார், மற்றவர்களை திருப்பி அனுப்பினர். வெளியே சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களிலும் சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மார்க் மற்றும் சாராய கடைகள் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக மூடப்பட்டது, இந்த நிலையில் கள்ளச்சந்தையில் அதிக அளவில் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் அதிக அளவில் மதுவின் தேவை இருப்பதாகவும், அதை வைத்து தமிழகம்-புதுச்சேரியில் கள்ளச்சந்தை மது விற்பனை செய்ய பெரிய அளவில் ஒரு தரப்பினர் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தபோவனம் சோதனைச்சாவடியில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காய்கனி ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படியில் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் மூட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே 80பெட்டிகளில் 3840 குவார்ட்டர் மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது.
மேலும் லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் லாரியின் உரிமையாளர் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமானது என்றும் லாரியின் டிரைவர் உளுந்தூர்ப்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் கண்டாச்சிபுரம் அடுத்த தணிக்கலாம்பட்டு ரவி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் பெங்களுரில் இருந்து மதுபாட்டில்களை குறைந்தவிலையில் வாங்கி அதனைக் கடத்திவந்து ஊரடங்கை பயன்படுத்தி கிராமப்புற பகுதிகளில் பலமடங்கு விலையில் விற்பதற்காக கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவி, அய்யனார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கொரோனா தொற்று அதிகமானதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் குடி பிரியர்கள் ஒரு மது பாட்டிலின் ரூபாய் 500, 800 என அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இதுபோன்று தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.