ஜார்க்கண்ட் மாநிலம் தலைநகரான ராஞ்சி தான் தோனியின் சொந்த ஊர், இது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த ராஞ்சியின் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, அங்க இருந்து ஒரு 20 நிமிஷம் பயணம் செய்தோமானால் கைலாஷ்பதியை அடைந்து விடலாம். அப்படி என்னதான் இருக்கு அந்த கைலாஷ்பதியில் என்றால், அதுதான் தோனியின் பண்ணை வீடு. முன்பு ராஞ்சியின் ஹர்மு சாலையில் இருந்த தன்னுடைய பழைய வீட்டில் இருந்து ஷிப்ட் ஆன தோனி, தற்போது இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பண்ணை வீட்டில் தான் வசித்து வருகிறார். அந்த பண்ணை வீட்டுக்கு தோனி வைத்துள்ள பெயர் தான் கைலாஷ்பதி. உலகத்திலேயே ஒரு கிரிக்கெட் வீரர் வைத்திருக்கும் வீடுகளிலேயே இது பெரியது என சொல்ல படுகிறது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தனது கனவு வீட்டை கட்டி எழுப்பியுள்ளார் தோனி.
தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தபோது, சூரியன் அஸ்தமனமாகும் மாதிரியான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் மனைவி சாக்ஷி பகிர்ந்தது மிகவும் வைரலானது, அந்த புகைப்படத்தில் இருக்கும் வீடு தான் கைலாஷ்பதி.
தோனியின் இந்த பண்ணை வீட்டில் இல்லாத வசதிகளே கிடையாது, ஒரு மினி கிரிக்கெட் ஸ்டேடியம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பரந்த புல்வெளி, பச்சை பசேல் தோட்டம், வண்ண வண்ண மலர்கள் இப்படி நவீன வசதிகளோடு இயற்கையும் ஒன்றினையும் வகையில் இருப்பது தான் இந்த பண்ணை வீட்டின் சிறப்பம்சம்.
செல்ல பிராணிகளுடன் தோனிக்கு இருக்கும் பிணைப்பு நாம் அனைவருக்கும் தெரியும், இந்த பண்ணை வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார் தோனி. இந்த நாய்களுக்கு பயிற்ச்சி வழங்குவதற்கு என மட்டுமே தனி இடம் இந்த பண்ணை வீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் அண்மையில் புதிதாக இணைந்திருப்பது தான் "செட்டாக்", ஜோத்பூரை சேர்ந்த அரிய வகை மார்வாரி ரக குதிரை!
காலையில் சூரியன் உதிக்கும் போது, இங்குள்ள இயற்கை சூழலில் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் சிறகடிப்பதை காணும் போது நம் மனதும் சிறகடிக்கின்றன.
தோனியிடம் உள்ள அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலான மோட்டர் பைக், கார்களை நிறுத்தி வைக்க தனி இடம் உள்ளது.
தோனிக்கு போர் அடித்தாலும், சாக்ஷிக்கு போர் அடித்தாலும் - உடனே கைலாஷ்பதியில் பார்ட்டி தான். பார்பீக்யூ செஞ்சு பார்ட்டி கொண்டாட மட்டும் இங்கே தனி இடம் உண்டு.
அடேங்கப்பா இவ்ளோவா என நினைப்பவர்களுக்கு, கடைசியாக ஒரே ஒரு தகவல். வீடு, செல்ல பிராணிகள் என தனது நேரத்தை செலவிடும் தோனி, அந்த பண்ணை வீட்டை சுத்தி தனியாக 10 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்கிறார், அங்கு ஸ்ட்ராபெரி, முட்டைக்கோஸ், தக்காளி, பட்டாணி, பப்பாளி, ப்ரோக்கோலி என பல காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்க படுகிறது. இதற்கு ராஞ்சியின் லோக்கல் மார்க்கெட்டில் மிக பெரிய டிமாண்ட். தோனி வீட்டில் விளைஞ்ச முட்டை கோஸ் தான் வேணும் என அடம்பிடித்து வாங்கி சொல்கிறார்களாம் ராஞ்சி மக்கள். இதில் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் தோனி பண்ணையிலிருந்து காய்கறிகள் ஏற்றுமதியும் செய்ய படுகிறது!