திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமைந்துள்ளது கருத்தக் கோடங்கிப்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் 15 வயது சிறுமியும், இளைஞர் ஒருவரும் சடலமாக தொங்கியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


தூக்கில் தொங்கிய ஜோடி:


தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மரத்திற்கு கீழே ஒரு பெட்ஷீட்டும், அதில் ஒரு செல்போனும் இருந்தது. அந்த செல்போனில் உயிரிழந்த இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், அதன் கீழே மிஸ் யூ ஆல் போயிட்டு வரேன் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


இதனால், உயிரிழந்த இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்றும், தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி ஒருவர் காணவில்லை என்ற புகார் பதிவாகியிருந்தது.


காதல் விவகாரம்:


கருத்தக்கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரை காணவில்லை என்று புத்தானத்தம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையில் இளைஞருடன் சடலமாக தொங்கிய சிறுமி, புகார் அளித்தவரின் மகள் என்று தெரிய வந்தது.


மேலும், அந்த சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வய்து நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த சிறுமியும், அந்த நபரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். போலீசார் முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர்.


போலீசார் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் ஜோடியாக  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060...


மேலும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் நடந்த சோகம்


மேலும் படிக்க: Crime: மது அருந்துவதை தடுத்த மனைவி! உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவர் - உ.பி.யில் ஷாக்!