ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் அலுவலக ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 65 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சியினை வைத்து தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் சண்முகம் வயது (65). அவருடைய மனைவி மரகதம் வயது (55). நேற்று பகல் 10.30 மணி அளவில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள தேவாலயத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். பின்னர் பகல் 11.30 மணிக்கு வீட்டுக்கு திரும்ப வந்துள்ளனர். அப்போது உள்பக்கம் தாழ்பாள் போட்டு இருந்தது. உடனடியாக வீட்டின் பின்பக்கம் போய் பார்த்தபோது கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு சண்முகம் அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள் பீரோ உடைத்து நகை கொள்ளை
அதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே சண்முகம் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அறையில் இருந்த 3 பீரோக்களில் ஒரு பீரோ மட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதில் வைத்திருந்த வளையல், தங்க சங்கிலி, அட்டிகை, மோதிரம் உள்பட 65 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது சண்முகத்திற்கு தெரிய வந்தது. இதுகுறித்து சண்முகம் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் (பொறுப்பு) சுப்பிரமணி, துணை ஆய்வாளர் ஷாபுதீன் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தம்பதி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை திருடி சென்றுள்ளனர்.
சிசிடிவி காட்சி வைத்து காவல்துறையினர் விசாரணை
மேலும், நகை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்முகம்-மரகதம் தம்பதியினரின் மகன் இறந்து விட்டார். அவரது மனைவி தற்போது சேத்துப்பட்டு அருகே அருள்நாடு கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரை அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், உடனடியாக கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
A.R. Rahman concert : ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைத்த போலீசார்..!