2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளதால் பொதுமக்கள் தயாராக இருக்குமாறு ரயில்வே சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊரில் சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பண்டிகையை கொண்டாட வேண்டுமென நினைப்பார்கள். அப்படியான சமயத்தில் பெரும்பாலும் மக்கள் விரும்புவது ரயில் பயணங்களை தான். பேருந்து, விமானம் போன்ற மற்ற போக்குவரத்து சாதனங்கள் இருந்தாலும் ரயிலில் கட்டணம் குறைவு, கூட்ட நெரிசலை தவிர்க்கலாம், சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணம் என்பதால் எப்போதும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
என்னதான் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டாலும் ரயில் பயணங்களை தான் மக்கள் விரும்புகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேவும் வழக்கமாக ரயில் சேவைகளை தவிர்த்து பண்டிகை கால சிறப்பு ரயில்களையும் இயக்கும். எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என்கிற பெயரில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரண நாட்களில் கூட டிக்கெட்டுகள் காலியாகி விடும் என்றால் பண்டிகை நாட்களில் நாம் கேட்கவா வேண்டும். சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும்.
பொங்கல் பண்டிகை முன்பதிவு
நடப்பாண்டு அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக வரும் தீபாவளி வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இப்படியான நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) தொடங்குகிறது. ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- ஜனவரி 11 (வியாழக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நாளை (செப்டம்பர் 13) முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 12 (வெள்ளிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் நாளை மறுநாள் (செப்டம்பர் 14) முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 13 (சனிக்கிழமை) செல்ல நினைப்பவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
- ஜனவரி 14 (ஞாயிற்றுக்கிழமை) பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி, கடைசி நேர சிக்கலை தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Yuvan Shankar Raja: ‘இசை நிகழ்ச்சியில் குளறுபடி’ .. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியே.. கைகொடுத்து களத்தில் இறங்கிய யுவன்ஷங்கர் ராஜா..