மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றதாக பொய் புகார் அளித்த கணவன் மனைவி மீது குத்தாலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் திருட்டு போனதாக பொய் புகார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மூவலூர் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான மணிகண்டன். இவர், கடந்த 2 -ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் 1,10,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் தீவிர விசாரணை
புகாரை பெற்று கொண்டு குத்தாலம் காவல் துறையினர் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் திருட்டுப் போனதாக கூறப்பட்ட சம்பவம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை கண்டறிந்தனர். இதுபோன்று பொய் புகார்கள் அளித்து வேறு வழக்குகளில் மீட்கப்படும் தங்க நகைகள் மீது இவர்கள் உரிமை கோரி அவற்றை பெற்று விடலாம் என்ற தவறான எண்ணத்தில் இது போன்ற செயலில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவதாகவும், அவர்களிடம் முழுமையான விசாரணைகளுக்குப் பிறகு ஏன் அவர்கள் இவ்வாறான பொய் புகார் அளித்தார்கள் என உண்மை நிலை தெரிய வரும் என காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
எங்கள் அன்பு முதல்வா.. பள்ளிக்கூடம் கட்டி தாங்க... கொடை ரோடு அரசு பள்ளி மாணவர்கள் பாடல் வைரல்
கணவன் மனைவி மீது குற்ற வழக்கு பதிவு
தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகிய இருவரும் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 74,000 ரூபாய் ரொக்க பணத்தை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், மீதமுள்ள 9 சவரன் தங்க நகைகள் அடமானத்தில் வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர் பொய்யான புகார் அளித்தமைக்காக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
மேலும் விசாரணையின் போது மணிகண்டன் தம்பதியினர் தாமாக முன்வந்து ஒப்படைத்த 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 74,000 ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்று பொய் புகார் அளிப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்து, பொய் புகார் என விரைந்து கண்டு பிடித்த காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.