GST Credt Card: மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. 


கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைக்கு வரி:


சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) கவுன்சில்  ஆலோசனைக் கூட்டம், வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.இந்த  கூட்டத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரையிலான சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பேமெண்ட் திரட்டிகளுக்கு (Payment Aggregator) 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. Payment Aggregator என்பது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகும். இது வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதையும் வணிகங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறது. 


மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய ஃபிட்மென்ட் கமிட்டி, வரி விகிதம் குறித்து ஆலோசித்து வருகிறது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு PAக்கள் எளிதாக்குபவர்களாக செயல்படுவதாக குழு கருதுகிறது. அவை வங்கிகள் அல்ல என்று கருதி, ஜிஎஸ்டி வரி விதிக்க கமிட்டி ஆலோசித்து வருகிறது. அடுத்த வாரம் நடைபெறும் 54வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 


யாருக்கு பாதிப்பு?


"இந்த வரி விதிக்கப்பட்டால், அது பொதுவாக குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கொண்ட சிறு வணிகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்... பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவும் நிறுவனங்கள்,  வரிச்சுமையை நேரடியாக வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு அனுப்பும்" என்று துறைசார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 


தற்போது, ​​PA நிறுவனங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.5 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை பேமெண்ட் கேட்வே கட்டணத்தை வசூலிக்கின்றன. GST விதிக்கப்பட்டால், PAக்கள் தங்கள் வரிச்சுமையை வணிகர்களுக்கு மாற்றும் வாய்ப்பு அதிகம் என்பதே பிரதான அச்சுறுத்தலாக உள்ளது.


மீண்டும் வரும் கைவிடப்பட்ட வரி:


தற்போது, ​​ரூ. 2,000க்குக் குறைவான பரிவர்த்தனைகள் மீதான கட்டணத் திரட்டிகள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. QR ஸ்கேனிங், பாயின்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டணங்களை PAக்கள் கவனித்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2016 ஆம் ஆண்டில், அரசாங்கம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது, ​​டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், ரொக்கத்திலிருந்து ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கு படிப்படியாக மாறுவதற்கும் ரூ.2,000-க்குள் கார்ட் வாயிலாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட சேவை வரியை மத்திய அரசு கைவிட்டது.