தஞ்சையில் தன் மகளிடம் பேசியதை கண்டித்த தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (46) . பெயிண்டர். இவரது மகள்,  கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பாலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம்  பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார். இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




பைக் திருட்டு


தஞ்சையில் பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை அருகே தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (26). இவர் தனது பைக்கை மோட்டார் சைக்கிளை தஞ்சாவூர் நம்பர் ஒன் வல்லம் சாலையில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஸ்ரீராம் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





குடும்பத்தகராறில் வீட்டை விட்டு சென்ற பெண்

தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூரில் வீட்டை விட்டு சென்ற தனது தாயை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூரை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி கமலா (48). கடந்த 20ம் தேதி குமரன் தனது மனைவியை குடும்பத்தகராறில் திட்டி உள்ளார். இதனால் வருத்தத்தில் இருந்த கமலா அன்று வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கமலாவை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் கமலாவின் மகன் சரத்குமார் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.