உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன.


இந்நிலையில் 2022 டிசம்பர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதாவது, உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பிக்க ஜனவரி 17 கடைசித் தேதி ஆகும். இதுகுறித்த அறிவிப்பை யு.ஜி.சி. தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’83 பாடங்களுக்கு உதவிப் பேராசிரியை நியமனம் செய்யவும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் தேசிய தகுதித் தேர்வை எழுதிச் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு கணினி முறையில் நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடைபெற உள்ளது. 


இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். 


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.  


தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in