தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், விலை உயர்ந்த செல்போன்கள், பணம் போன்றவற்றை மா்ம கும்பல் திருடி வருவதாக பொதுமக்கள் பொம்மிடி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொம்மிடி பகுதியில் தனியாக இருந்த வயது முதிர்ந்த இரண்டு பெண்களை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கட்டி வைத்து அவர்களிடம் இருந்த தங்க நகைகள், வீட்டின் பீரோவில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில் தனிப்படை காவலர்கள் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பொம்மிடி பகுதியில் சந்தேகத்து இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனை அடுத்து வாலிபரிடம் தீவிர விசாரணை செய்ததில், அந்த வாலிபர் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இந்த இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை காலை நேரங்களில் நோட்டமிட்டு கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை அடித்துச் செல்வது தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து ஏற்காடு பகுதிக்கு சென்ற தனிப்படை காவலர்கள், திருட்டு வழக்கில் தொடர்புடைய பெரியான் ( 37), கார்த்திக் (21), கோவிந்தராஜ் (35), மணி (20), சக்திவேல் (26) உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தொடர்ந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஏழு பவுன் தங்க நகை, குத்து விளக்கு, செல்போன், பணம், திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, இரும்பு ராடு, முகமூடி மற்றும் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர் .
இந்த கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து பொம்மிடி பகுதிக்கு வந்து தனியாக இருக்கும் வீடுகளில் வயதானவர்களை நோட்டமிட்டு பகலில் கண்காணித்து இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து விட்டு ஏற்காடு தப்பி சென்றது தெரியவந்தது.