தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வாகன சோதனையின்போது காரில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியா உல் ஹக், மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் அறிவுரையின்படி, டவுன் டிஎஸ்பி ஆர். சோமசுந்தரம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் எம். கலைவாணி (மேற்கு), வை. சந்திரா (மருத்துவக்கல்லூரி), மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பி. தேசியன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எப். அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் எம். அப்துல் ரஹீம், கே. சக்திவேல் மற்றும் போலீசார் தஞ்சாவூர் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் நேற்று மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது, ரூ.20 லட்சம் மதிப்புள்ள 103 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றைக் கைப்பற்றிய போலீசார் காரில் வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜி. பால் பாண்டி (40), போத்தம்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி இடையாத்திமங்கலத்தைச் சேர்ந்த ஆர். வீரப்பன் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.