டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தும் பணி சிலரால் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் முதல் வீதிகள் வரை சல்லடை போட்டு குற்றவாளிகள் பிடிக்கப்படுவதோடு போதைப்பொருளை தடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியாக மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் தொடர்ச்சியாக குற்றம் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டது. 


இந்தோனேசியாவைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் என்ற 28 வயது இளைஞர் சுற்றுலா விசாவில் லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்த அவரின்  நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் மத்திய வருவாய் புலனாய்வு துறைஅதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் இட்ரீஸிடம் இருந்து 15 கிலோ மதிப்பு கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்த அதிர்ச்சி மறைவதற்குள் டெல்லியில் 50 கிலோ எடையுள்ள சூடோ பெட்ரைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டிள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.75 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளை தேங்காய் பவுடர் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு கடத்தியுள்ளனர். இது கிட்டதட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாகும். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை படுகொலை செய்த பெண் வீட்டார்!