நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகளை தமிழக தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடந்து வரும் டாடா சோலார் நிறுவனத்தையும், போஷ் நிறுவனத்தையும் பார்வையிட்டு அந்த நிறுவன உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறும் பொழுது,
"தொழிற்சாலை நடத்துபவர்களின் குறைகள் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிப்காட்டில் தொழில் நடத்துபவர்களுக்கான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும். ஆய்வு செய்த தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரிகின்றனர். டாடா சோலார் நிறுவனத்தில் 88 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். போஷ் நிறுவனத்தில் 75% பெண்கள் பணியாற்றுகின்றனர். இந்திய அளவில் தொழிற்சாலைகளில் 43 சதவீதம் தமிழக பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையாலே இது போன்ற நிலை சாத்தியமாகி உள்ளது. கங்கைகொண்டான் சிப்காட் விரிவாக்கம் விரைவில் நடைபெறும் நிலங்களை தாமாக முன்வந்து தரக்கூடிய மக்களிடம், விவசாயிகளிடம் அதற்கான உரிய விலை கொடுக்கப்பட்டு சிப்காட் விரிவாக்கம் செய்யப்படும். சிப்காட்டில் பணிகள் நடந்து வரும் டாடா சோலார் நிறுவன பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவடைய வாய்ப்புள்ளது. புதிய தொழிற்சாலைகளை தமிழக முதலமைச்சர் வந்து திறக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் கலைஞரின் கனவு திட்டம். இந்த திட்டம் முதல்வரின் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது. அதில் சில சட்ட ரீதியான பிரச்சனைகள் உள்ளது. அதனை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தகவல் தரப்படும். விண்வெளி ஆய்வு பாதுகாப்பு துறை ஆகியவற்றிற்கு தேவையான உபகரண தொழிற்சாலைகளில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை விரைவில் எட்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ் புதிய தொழிற்சாலைக்கான பணிகளை தமிழக முதலமைச்சர் 25ஆம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார்.
புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கடந்த மாதம் தான் போடப்பட்டது. இம்மாதமே பணிகள் தொடங்குவது சிறப்பு வாய்ந்ததாகும். 16,000 கோடி முதலீட்டில் பேட்டரி கார் தொழிற்சாலை அமைய உள்ள நிலையில் முதற்கட்டமாக நான்காயிரம் கோடி முதலீடு தூத்துக்குடியில் செய்யப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு தேவையான துணை நிறுவனங்களும் அங்கே வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி முழுமையாக வளர்ச்சியை அடையும். நெல்லை மாவட்டத்திற்கும் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். பேட்டியின் போது தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.