சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி பிரவீன் ஷர்மியை திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் இவர்களுடைய காதலுக்கு, திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. 


இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மதுபான கடை வாசலில் பிரவீன் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட கூரிய  ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஷர்மியின் சகோதர் வெட்டியதில் பிரவீனின் தலை, முகம், கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஷர்மியின் அண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடும் பணியும் தீவிரமடைந்தது. இதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற ஆணவப் படுகொலைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தாலும் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தலைநகர் சென்னையில் நடைபெற்றுள்ள இந்த ஆவணப் படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.