'தான் குற்றவாளி இல்லை', எனத் தொடர்ந்து ஒரு வழக்கில் ஒத்துக்கொள்ள மறுத்த கிராமப்பஞ்சாயத்து ஊழியரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனி பீடு காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் அர்ஜூன். இவர் அவருடைய காவல்நிலையத்தில் கடந்த 10 ஆம் தேதியன்று 22 வயதான கிராம பஞ்சாயத்து ஊழியரான புனித் என்பவரை காவல் நிலையத்திற்கு வரசொல்லி அழைப்பு விடுத்துள்ளார் சப்- இன்ஸ்பெக்டர். கிராமத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அதற்காகத் தான் காவல்நிலையத்திலிருந்து அழைப்பு விடுக்கின்றனர் என்று எண்ணி புனித்தும் அங்கு செனறுள்ளார்.
ஆனால் அவர் நினைத்ததுப்போன்று எதுவும் நடக்காமல், அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையிலான சம்பவம் தான் அன்றைய நாள் அரங்கேறியுள்ளது. அதாவது காவல்நிலையத்திற்குச் சென்ற கிராம பஞ்சாயத்து ஊழியர் புனித்தை, சப்- இன்ஸ்பெக்டர் ஒரு வழக்கு ஒன்றில் குற்றவாளி தான் என ஒப்புக்கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தொடர்ந்து புனித் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், சப் – இன்ஸ்பெக்டர் புனித்தைக்கடுமையாகத் தாக்கியுள்ளார். இருந்தப்போதும் அந்த சப் – இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரம் தீரவில்லை. ஒரு கட்டத்தில் சப்- இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்தில் இருந்த மற்றொரு குற்றவாளியை அழைத்து அவரது சிறுநீரைக் குடிக்க வைத்து பெரும் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் இந்த அளவிற்கு அரசு ஊழியரைக் கொடுமைப்படுத்தக்காரணம் என்ன? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து ஊழியர் புனித்தை சிறுநீரை குடிக்க வைத்த விவகாரம் தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், கர்நாடக மாநிலத்தில் அர்ஜூன் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தப்போது, இப்பிரச்சனைத்தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்குவதற்கு சட்டத்தில் எவ்வித இடமும் இல்லை என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே செய்யாத ஒரு குற்றத்திற்காக அரசு ஊழியர் ஒருவரைத் தாக்கியதோடு, சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்திய சம்பவத்தில் எப்போது வேண்டுமானாலும் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.