பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு சாலையில் தள்ளாடிச் சென்ற மாணவிகளை காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸிடம் ஒப்படைப்பு
கரூர், சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் தள்ளாடியபடி சாலையில் சென்ற நிலையில், இவர்களைக் கவனித்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மொத்தம் 3 பேர் ஒன்றாக சுற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒயின் குடித்தால் கலர் ஆகலாம் என்று தூண்டல்
இதனையடுத்து மற்றொரு மாணவியையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்ததும், தேர்வில் தோல்வியடைந்ததால் மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், மற்றொரு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்ததும் தெரிய வந்தது.
மேலும், ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என நண்பர்கள் எவரோ சொன்னதை மனதில் கொண்டு ஒயின் வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாகவும், ஒயினில் போதை வரும் என்று தெரியாமல் குடித்து விட்டு அவர்கள் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மாணவிகளை வற்புறுத்தி தீனா என்ற இளைஞர் மது அருந்தவைத்தது தெரிய வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கைது செய்துள்ளனர்.
பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி
தமிழ்நாட்டில் முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று (ஆக.11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்பு நடந்தது. அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்