மெக்னம் ஐஸ் க்ரீம் விளம்பரத்தில் நடித்த பெண் ஹிஜாப் அணியாமல் இருந்தார் என்று எழுந்த சர்ச்சையை அடுத்து இனி விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவே தடை விதித்து உள்ளது ஈரான் நாடு.


ஈரான் நாட்டின் கடுமையான விதிகள்


மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈரான். கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடு என்பதால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதன்படி, 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். எனினும், ஈரானை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கொள்கைகளுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதில் மென்மை காட்டப்படுகிறது.



ஈரான் அதிபர்


தற்போது ஈரானில் அதிபராக இருக்கும் இப்ராஹிம் ரெய்சி பழமைவாத கொள்கைகளில் தீவிர பற்றுடையவர். இதனால், அங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது போன்ற இஸ்லாமிய சட்டங்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில் மெக்னம் ஐஸ் க்ரீம் நிறுவனம் ஒரு விளம்பரத்தை எடுத்து வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


விளம்பரத்தில் என்ன பிரச்சனை


வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் ஒரு பெண் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல சித்தரிக்கப் பட்டு இருந்தது. அந்த விளம்பரம் பாலியல் உணர்வுகளை தூண்டும்படியாக அமைந்துள்ளது என்றும் அந்த விளம்பரத்தில் தோன்றும் பெண் ஹிஜாப் அணியவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த விளம்பரத்தால் கோபமடைந்த ஈரானிய மதகுருமார்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோஸ் மீது வழக்குத் தொடருமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.



பெண்கள் நடிக்கத் தடை


இந்த விளம்பரம் "கண்ணியத்திற்கு எதிரானது" என்றும், "பெண்களின் மதிப்புகளை அவமதிக்கிறது" என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்போது ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பயிலகங்களுக்கு எழுதிய கடிதத்தில், "ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின்" படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரானின் விதிகள் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.


ஹிஜாப் பிரச்சனை


ஈரான் அரசும் கடந்த சில மாதங்களாகவே பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயம் ஆக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அங்குள்ள பெண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சென்ற மாதம் கூட ஹிஜாப் அணிவதற்கென ஹிஜாப் தேசிய தினம் கடைபிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து சர்வதேச அளவில் ஹாஷ்டாக் ஒன்று ட்ரெண்ட் ஆகி இருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.