மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக்குண்டை அடுத்த டி.புதுபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இராணுவ வீரர் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்தார்.
இந்நிலையில் அவரது சொந்த ஊரான புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது தாயாரான ஆண்டாள் இராணுவ வீரரின் சிறுவயது போட்டோவை வைத்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இராணுவ வீரரின் மரணத்தால் கிராமமே சோகமயமாக காணப்படுகிறது.
லட்சுமணன் கடந்த 2019-ஆம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றுவிட்டு 2019-ஆம் ஆண்டே இராணுவத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. தர்மராஜ் - ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஒருவர் லட்சுமணன் எனவும், அண்ணன் இராமன் பி.பி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பட்டி கிராமத்தில் ராணுவ வீரர் இலட்சுமணன் வீட்டில் உறவினர்கள் குவிந்துள்ளனர். இது குறித்து உறவினர்கள் சிலர் கூறுகையில்..” திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் அதிகளவு ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். நாட்டிற்காக சேவை செய்ய சென்ற லெட்சுமணன் நாட்டிற்காக உயிரைக் கொடுத்தது ஒரு விதத்தில் பெருமை அளிக்கிறது. ஆனால் அவனுடைய மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிராமத்த்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிப்பான். கிரிக்கெட் மற்றும் கபடிப் போட்டிகள் மீது அவனுக்கு அதீத ஆர்வம் இருந்தது.
விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ராணுவத்தில் இணைந்துவிட்டான். இந்த சூழலில் அவன் உயிரிழந்தது அனைவருக்கும் பெரும் இழப்பாக உள்ளது. லெட்சுமணனின் சகோதரன் ராமனுக்கு அரசுப் பணி வழங்கி ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டனர்.
ராணுவ வீரர் லெட்சுமணன் உயிரிழந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணுவ வீரர் லெட்சுமணின் உடல் மரியாதை செய்யப்பட்ட பின் சொந்த ஊரான புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்