மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் - உஷாராணி தம்பதியரின் மூத்த மகள் தர்ஷிகா. இவருக்கும், கொள்ளிடம் அருகே மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் ஜெகதாம்பாள் தம்பதியினர் மகனான ஒப்பந்த பணி செய்து வரும் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கும் கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சீர்வரிசையாக மணமகன் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் திருமணமான 2 மாதத்தில் கணவன் ஒப்பந்தபணி எடுத்து வேலை செய்ய பணம் தேவைப்படுவதால் 4 லட்சம் ரூபாய் வரதட்சனையாக வாங்கி வரச்சொல்லி மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்ஷிகாவின் தாய் இறந்த நிலையில் அவரது 30 நாள் நிகழ்வுக்கு வந்த தர்ஷிகாவை 10 நாட்கள் கடந்தும் கார்த்திக் அழைக்க வராமல் நீ அங்கேயே இருந்து கொள் எனக்கு விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து இடு என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மாப்பிள்ளை வீட்டாரிடம் சமாதானம் செய்து வைத்து கடந்த ஜூன் 5 -ஆம் தேதி கணவர் வீட்டில் சேர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தர்ஷிகா உடலில் கொதிக்கும் வெண்ணீரை ஊற்றிக் கொண்டதாகவும், அவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷிகாவின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ் வரை தீயில் கருகி எரிந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த தர்ஷிகா கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணவர் பாலமுருகன் மற்றும் மாமியார், மாமனார், உள்ளிட்ட உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தன் மகள் மீது மண்ணெண்னை ஊற்றி உயிரோடு கொளுத்தியதில் தீக்காயம் அடைந்த தங்கள் மகள் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்ததாக குற்றச்சாட்டிய தர்ஷிகாவின் தந்தை சிகிச்சையில் இருந்த போது அந்த பெண் வாக்குமூலம் அளித்த வீடியோவையும், தர்ஷிகா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எழுதி வைத்திருந்த கடிதங்களையும் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக தர்ஷிகாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தர்ஷிகாவின் உடலில் ஊற்றப்பட்டது பெட்ரோலும் அல்ல, மண்ணெண்ணையும் அல்ல வேறு ஏதோ ஒரு திரவ பொருளை ஊற்றி எரித்து உள்ளனர் என்றும், எனவே சடலத்தை முறைப்படி உடல்கூறு ஆய்வு செய்வதற்காக, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பத்துள்ளனர்.