Crime: பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பெண்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கவுர்(50). இவரது  மகள் குர்ப்ரீத் கவுர்(32). இவரின் கணவர் ஜஸ்விந்தர் சிங். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பெண் குர்ப்ரீத் கவுரின் கணவர் ஜஸ்விந்தர் சிங், அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், பெண் குர்ப்ரீத் கவுர் அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். 


இந்நிலையில், சம்பவத்தன்று காலை குர்ப்ரீத் கவுர் மற்றும் அவரது தாயார் ரஞ்சித் கவுர் வீட்டில்  தனியாக இருந்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவர்களது வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், இவர்களது வீட்டிற்கு பார்த்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் உடலை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”ஜஸ்விந்தர் சிங், தனது மாமியார் மற்றும் மனைவியை கொலை செய்ய, அவர்களது வீட்டிலேயே வேலைக்கு ஒருவரை அமர்த்தியுள்ளார். இதனால், சமயம் பார்த்து அந்த நபர், கூட்டாளியுடன் சேர்ந்து இரண்டு பெண்களை கொலை செய்துள்ளதாக” போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Rahul Gandhi On Adani: அதானி குழுமம் செய்த முறைகேடே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.. ராகுல் சொல்வது என்ன?