அதானி குழுமம் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அதானி குழுமத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி முறைக்கேட்டால் மக்கள் கூடுதல் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  






பிரபல ஆங்கில பத்திரிக்கையான financial times அதானி நிறுவனம் நிலகரி இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளது என்பது குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதானி குழுமம் இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறது.  ஆனால் அந்த நிலக்கரி  இந்தியாவுக்கு வருவதற்குள் அதன் விலை இரட்டிப்பாகிறது. இதன் காரணமாக மின்சார கட்டணம் உயர்கிறது. அதானி குழுமம் இதன் மூலம் ஏழை எளிய மக்களிடம் இருந்து பணம் வசூளிக்கிறது. இது நேரடியான திருட்டு வேலை. இந்த நாளிதழில் வெளியான செய்தி எந்த ஒரு அரசாங்கத்தையும் கவிழ்க்கும் தன்மை கொண்டது” என குறிப்பிட்டுள்ளார்.  


மேலும், “அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலைப்பட்டியலை வழங்குவதால், தங்கள் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கணக்கில் வராத ரூபாய் 20,000 கோடி என்று தெரிவித்துள்ளோம் ஆனால் தற்போது மேலும் ரூபாய் 12,000 கோடி உயர்ந்து மொத்தம்  ரூபாய் 32,000 கோடியாக உயர்ந்துள்ளது,” என தெரிவித்துள்ளார்.  


பைனான்சியல் டைம்ஸ் லண்டன் அனைத்து ஆவணங்களையும் அணுகும் போது, ​​அதானி குழுமத்திற்கு எதிரான ஆவணங்களை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதானிக்கு உயர் மட்டத்தில் பாதுகாப்பு உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது  என்றும் கூறினார்.  கர்நாடக அரசு வழங்கிய மின் மானியம் குறித்து பேசிய அவர், “கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மின் மானியம் அளித்து வருகிறது, மத்தியப் பிரதேசத்திலும் அதேபோன்ற மானியம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மீது அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் தான் மின் கட்டணம் உயர்கிறது” என தெரிவித்துள்ளார்.  






இவ்வளவு கேள்விகள் இருந்தும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அதானிக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். “இது தொடர்பாக  விசாரணை நடத்தி உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும், ”என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.