சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்குகிறார்களா , முறையாக கொரோனா வைரஸ் தொற்றின் அரசு சொன்ன விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க பெரும்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்தஉதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ மற்றும் உடன் காவலர் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

 

அப்போது பெரும்பாக்கம் பகுதியில் உள்ள கோழிக்கடை ஒன்றுக்கு சென்றபோது, அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட பெரும்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்  ஜான் போஸ்கோ ஏன் முககவசம் அணியவில்லை, இதனால் கொரோ444னா வைரஸ் தொற்று பரவும் என கண்டிப்புடன் கேட்டுள்ளார். மேலும் முறையாக கடையை சுத்தமாக வைத்திருக்கவில்லை எனவும் கேட்டதாக கூறப்படுகிறது.

 



இதில் கடை ஊழியருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ கடை ஊழியரை திடீரென தான் அணிந்திருந்த பூட்ஸ் காலால் மிதித்து தாக்கி விட்டு கடை ஊழியரை மிக கடுமையாக வசை பாடிவிட்டு சென்றுள்ளார்.இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ்காரர் கடை ஊழியரை தாக்கிய காட்சியை கண்டு பொதுமக்களும், வியாபாரிகளும், இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

 

இதையடுத்து, கடை ஊழியரை ஷூ காலில் மிதித்து தாக்கியதாக போலீஸ் உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோவை இடைநீக்கம் செய்து இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இது தொடர்பான சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியான காட்சிகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் இணை ஆணையர் ஆறு வாரத்திற்குள் இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.