செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, யானை, கரடி, ஒட்டகச்சிவிங்கி, நீர்நாய், வெள்ளைப் புலி, காண்டாமிருகம், காட்டெருமை மற்றும் பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதால் மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் இது உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள். சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால் வார விடுமுறை நாட்களில், சென்னை சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தருவார்கள்.




இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமானதால் கடந்த மே மாதம் 20ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் வண்டலூர் பூங்காவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைக்காததால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை.


இந்த நிலையில் வண்டலூர் பூங்கா இன்றைய தினம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, அமிர்தி உயிரியல் பூங்கா, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. 


 இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் தொற்றின் அனைத்துவித நெறிமுறைகளும் பின்பற்றப்படும். பொதுமக்கள் அனைவரும் அரசு சொல்லும் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதேபோல் 2 மீட்டர் இடைவெளியுடன் விலங்குகளை பொதுமக்கள் கண்டு களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



அரசு தளர்வுகள் அளித்தும் திறக்கப்படாமல் இருந்த, வண்டலூர் பூங்கா தற்போது திறந்து இருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் வருகைக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா தற்போது காத்துக் கொண்டிருக்கிறது