Taliban : பண மழையில் நனையும் தலிபான்கள்.. எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம்?
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றியது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
உலக வல்லரசு நாடான அமெரிக்கா தனது படைகளை 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவித்து தொடர் தாக்குதல்கள் நடத்தியும், தலிபானால் எப்படி மீண்டும் அதிகாரத்துக்கு வர முடிந்தது? அமெரிக்க ராணுவத்தையே விரட்டும் அளவுக்கு ராணுவ பலமும், ஆயுதங்களும் தாலிபானுக்கு கிடைத்தது எப்படி? இதற்கான பொருளாதாரம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளன.
அப்டேட் ஆகி இருக்கும் தாலிபான்: அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த சில வாரங்களாக திரும்பப்பெறப்பட்டு வந்ததை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களாக தாலிபான், தங்கள் வசம் கொண்டு வந்து கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி தலைநகர் காபூலையும் கைப்பற்றியது.
அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த அதிபர் அஷ்ரப் கனியை விரட்டி விட்டு மாளிகையை தாலிபான்கள் கைப்பற்றிய காட்சியை இவ்வுலகமே கண்டிருக்கும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த தலிபான்களுக்கும் இப்போது உள்ளவர்களுக்கும் நிறைய மாற்றங்கள் இருந்தன. அவர்களின் உடைகள், வைத்திருக்கும் ஆயுதங்கள், பயன்படுத்தும் வாகனங்கள் என அனைத்திலும் முன்னேறி உள்ளனர். அவர்கள் வெளியிடும் காட்சிகளின் தரம்கூட அதிகரித்துள்ளது. தலிபான்கள் காட்டுமிராண்டிகள், நவீனத்தை எதிர்ப்பவர்கள், பெண்களை கொடுமைப்படுத்துபவர்கள் என உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்திலிருந்து மாறுபட்டு தெரிந்தார்கள். தற்போது அவர்கள் நேர்த்தியான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஆட்சியாளர்களாக தோற்றம் அளிக்கிறார்கள். இத்தகைய முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் அவர்களின் பணபலம்.
400 மடங்கு அதிகரித்த தலிபான்கள் வருவாய்: 2016-ஆம் ஆண்டு பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பதிவில், தலிபான்களின் ஆண்டு வருமானம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில், ரூ.2,969 கோடியை தாண்டுகிறது. ஆனால் இந்த வருவாய் 2021-ல் 400 மடங்கு அதிகரித்து 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அதாவது இந்திய மதிப்பில், ரூ.1.18 ஆயிரம் கோடிக்கும் அதிகம். இவ்வளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்ற தகவலை RFE/RF வெளியிட்டுள்ளது. சுரங்கம் – 464 மில்லியன் அமெரிக்க டாலர் கடத்தல் – 416 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நன்கொடைகள் – 240 மில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி – 240 மில்லியன் அமெரிக்க டாலர் வரிகள் - 160 மில்லியன் அமெரிக்க டாலர் ரியல் எஸ்டேட் – 80 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடைகளை குறைக்கும் தலிபான்: தலிபான் சுதந்திரமாக செயல்படும் ராணுவ அமைப்பதாக, நிதி ஆதாரத்தில் தன்னிறைவு அடைய கடுமையாக முயற்சித்து வருவதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் வெளிநாட்டு நன்கொடைகளை மட்டுமே சார்ந்து செயல்பட்டு வந்த தலிபான், படிப்படியாக அதை குறைத்துக்கொண்டது. 2017-18 ஆண்டுகளை காட்டிலும், 2020-ம் ஆண்டில் அதன் வெளிநாட்டு நன்கொடைகள் 15% குறைந்துள்ளன.