மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார். 




இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்ததுடன், 3 கடைகளுக்கு சீல் வைத்து, 75 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 60 பேர் அடங்கிய காவலர்கள் சாதாரண உடையில் சென்று குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சோதனை நடத்தினர். இதில் மயிலாடுதுறை நகரம், நீடுர், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 22 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 




தொடர்ந்து நகராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதேபோல், குத்தாலத்தில் ஏ.ஆர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதராணி தலைமையில் காவல்துறையினர் கஞ்சா குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் பிற பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு 4 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாலூக்காவிலும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். 




சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சீர்காழியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை சோதனை செய்தனர், அதில் புத்தூர், கொள்ளிட முக்குட்டு,  ரயில்வே ரோடு, செங்கமேடு அகிய நான்கு கடைகளில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.




இதனை அடுத்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.  சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் நான்கு கடைகளுக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும்,  வணிகர்கள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு உரிய அறிவுகளை வழங்கி இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Super 12 T20 World Cup Squads : டி20 உலககோப்பையில் களமிறங்கப்போது யார்..? யார்..? தெரியுமா..? அனைத்து அணிகளின் முழு விவரம் உள்ளே..!