விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடம்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 78). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருடைய செல்போனை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி, நீங்கள் பயன்படுத்தி வரும் ஏ.டி.எம். அட்டை முடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு உங்களுடைய ஏ.டி.எம். அட்டை எண் தரும்படி கேட்டார். அவர் கூறியவாறு கிருஷ்ணன், தன்னுடைய ஏ.டி.எம். அட்டையின் எண்ணையும் மற்றும் தனது செல்போனுக்கு வந்த OTP எண்ணையும் கொடுத்தார்.
பின்னர் அந்த நபர், அன்றைய தினமே கிருஷ்ணனின் வைப்புத்தொகை கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தில் ரூ.98 ஆயிரத்து 990-ஐ கடன் எடுத்த தொகையாக இன்டர்நெட் பேங்கிங் மூலம் கிருஷ்ணனின் சேமிப்பு கணக்கிற்கு மாற்றினார். மேலும் அந்த கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 162-ஐ 5 தவணைகளாக கிருஷ்ணனுக்கு தெரியாமல் நூதனமாக எடுத்து மோசடி செய்துவிட்டார். ஆனால் இந்த விவரம் தெரியாமல் கிருஷ்ணன், கடந்த 17-ந் தேதியன்று பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றபோதுதான், தன்னுடைய பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்