கடந்த மாதம் 2ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆர்யான் கானிற்கு கடந்த 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


 


இந்நிலையில் தற்போது அந்த வழக்கு போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அதிகாரிகளிடம் இருந்து மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிகின் மகன் தொடர்பான வழக்கு உட்பட் 6 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மத்திய பிரிவு விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் சில மத்திய பிரிவுகளின் உதவி தேவைப்படுவது ஆகியவை திடீர் மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. 


 






ஆனால் ஆர்யான் கான் வழக்கை விசாரிக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி சமீர் வான்கடே மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாக இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். ஆர்யான் கான் வழக்கின் முக்கிய சாட்சியமான கே.பி.கோசவியுடன் இருந்த பாதுகாவலர் பிரபாகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.8.லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார். லஞ்சம் தொடர்பான விவாதத்தை கே.பி.கோசவி கேட்டதாகவும். அதனால்தான் அவர் தற்போது உயிர் அச்சத்தின் காரணமாகத் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  மகாராஷ்டிர அரசின் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறியிருந்தார். 


 






இந்தச் சூழலில் இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”சமீர் வான்கடே ஆர்யான் கான் தொடர்பான வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளின் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் நிறையே நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் உள்ளது” என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க: நடந்தது கொலைதான்.. காட்டிக்கொடுத்த ஒத்த செருப்பு.. சினிமாவை மிஞ்சிய க்ரைம்!