பண்டிகை காலத்தில் மிகவும் அதிகமான ஆஃபர்களை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அள்ளித்தருகின்றன. இருப்பினும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை! ஏமாற்றுவதற்காக சைபர் குற்றவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் பணத்தை எடுப்பதை எப்படி தடுப்பது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் மட்டுமல்ல, வங்கிக் கடன் செயல்முறை, தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் கூட திருடுவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் பெரிய அளவிலான ஷாப்பிங்கையும் சிறிய ஷாப்பிங்கையும் சேர்த்து, தீபாவளி பண்டிகையை ஒட்டியே செய்கிறார்கள்.
வீடுகள், கார்கள் முதல் எலெக்ட்ரிக்கல் கேட்ஜெட்கள் வரை அனைத்தும் இந்தக் காலத்திலேயே வாங்கப்படுகின்றன. கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் நம்மிடையே இருப்பதால், பலர் தங்கள் ஷாப்பிங் செய்ய மால்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல விரும்பவில்லை, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவே பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள். வீட்டிலிருந்தே செய்யமுடியும் என்பதால் இதைச் செய்வது மிகவும் எளிதாகிறது. மேலும் வாங்கும் பொருட்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுவதால் அவற்றை தூக்கி அலைய வேண்டியதில்லை. இவ்வளவு வசதிகள் நிறைந்த இடத்தில் சைபர் க்ரைமும் பெருகத்தான் செய்கிறது. அவர்களிடம் இருந்து கவனமாக இல்லாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் வாங்கும் அல்லது பணம் செலுத்தும் வலைத்தளத்தை சரிபார்ப்பதில்லை என்பதை சைபர் கிரிமினல்கள் உணர்ந்துள்ளனர். வங்கிகள், இணையவழி மற்றும் பிற நிறுவனங்களின் பல போலி இணையதளங்கள் ஆன்லைனில் உள்ளன, அவை கிட்டத்தட்ட அசல் தோற்றத்திலேயே உள்ளன. பலர் பெரும்பாலும் போலி வலைத்தளங்களின் சலுகைகளால் ஏமாற்றப்பட்டு, சைபர் குற்றவாளிகளுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள். நிச்சயமாக, அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதில்லை. இத்தகைய கொடூரமான குற்றங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றி இங்கே சிறந்த பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
- நம்பமுடியாத பெரிய ஆஃபர்களுடன் அழைக்கும் அந்நியர்களிடம் பேசாதீர்கள். இந்த சலுகைகள் பொதுவாக எப்போதுமே போலியானவைதான்.
- தொலைபேசி, எஸ்எம்எஸ், சமூக ஊடகம் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.
- எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் பயனர்பெயர், கடவுச்சொற்கள், OTPகளை அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
- எந்த ஒரு ஷாப்பிங் நிறுவனத்திற்கான இணைப்பைக் கண்டறியவும் Google தேடலுக்குச் செல்ல வேண்டாம். அதில் ஒரு போலி இருக்கலாம், அவை அசல் போலவே இருக்கும் பார்ப்பதற்கு.
- நீங்கள் கேட்காத OTP உங்கள் மொபைலில் வந்துவிட்டால், எந்தச் சூழ்நிலையிலும் அதை உங்களிடம் அழைத்துக் கேட்கும் எவருடனும் அதைப் பகிர வேண்டாம்.
- மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் முதல் வங்கிக் கணக்குகள் வரை உங்கள் அனைத்து ஆன்லைன் கணக்குகளிலும் 2-பேக்டர் ஆத்தன்டிகேஷன் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
- Anydesk மற்றும் Quick Support போன்ற தொலைநிலை அணுகல் பயன்பாடுகளை நிறுவ வேண்டாம்.
- உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் பரிவர்த்தனை நடக்கும்போதெல்லாம் அறிவிப்புகளைப் பெற உங்கள் வங்கியில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்
- நீங்கள் ட்விட்டரில் இருந்தால், அந்த குறிப்பிட்ட வலைதள பக்கம் வெரிஃபைடு ஹேண்டிலா என்பதைக் குறிக்கும் நீல நிற டிக் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
- ஏதேனும் கட்டணத்தைப் பெறுவதற்கான இணைப்பை நீங்கள் பெற்றால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம். அது ஒரு மோசடியாக இருக்கலாம்.