ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு
செங்கல்பட்டு ( Chengalpattu News ): திமுகவை சேர்ந்த கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு என்ற ஊரை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார். முதலில் இந்த வழக்கானது காடம்புளியூர் காவல்துறை சார்பில் விசாரித்து வந்த நிலையில், அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் திமுக எம்பி. ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை நேர்மையாக நடைபெறாது
இந்த கொலை வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸார், கடலூர் எம்பி. ரமேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர்
இதனை அடுத்து இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஆறு மாதத்தில் இந்த வழக்கு விசாரணை முடித்தாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் எம்பி சுரேஷ் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்தார். மீண்டும் இந்த விசாரணை வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம் நடைபெற்ற முதல் விசாரணையைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் 24 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆறு மாதத்திற்குள் வழக்கு முடிக்க வேண்டும் என உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக ஆஜரான சம்பவத்தால், செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு உடனே காணப்பட்டது