சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் நகரங்களில், காஞ்சிபுரம் மிக்க முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம், ரெயில்வே சாலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர்  2 பெண் குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார். திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் இருவரும் தவித்தனர். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையோரம் நீண்ட நேரமாக நின்று அழத்தொடங்கினர்.

 

திடீரென மாயமான தாய்

 

இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்த போது தங்களது தாய் தண்ணீர் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார் என்று தெரிவித்தனர். குழந்தைகளுடன் வந்த தாய் அவர்களை தவிக்க விட்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து சிவகாஞ்சி போலீசார், 2 சிறுமிகளையும் மீட்டு விசாரித்தனர்.



அப்போது அவர்கள் தங்களது பெயர் தீக்ஷிகா ( 4), ஏரிகா ( 2) என்றும் தாய் ரம்யா, தந்தை சதீஷ் எனவும் தெரிவித்தனர். மேலும் தங்களது தாத்தா ஆறுமுகம், பாட்டி அமுதா எனவும் அவர்கள் வேலூரில் வசிப்பதாகவும் தெரிவித்தனர். தங்களுடைய அம்மா ரம்யாவுடன் வந்தபோது, தண்ணீர் வாங்கிவருவதாக கூறி சென்றதாக சிறுமிகள் அழுகையுடன் தெரிவித்துள்ளனர் .

 

வேலூரில் புகார் இல்லை

 

இதனைத் தொடர்ந்து சிவகாசி போலீசார் இதுகுறித்து விசாரணையை துவங்கினர். காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, குழந்தை காணாமல் போனது குறித்து புகார் ஏதாவது வந்துள்ளதா என கேட்டனர்.  ஆனால் வேலூரில் சிறுமிகள் மற்றும் தாய் மாயமானது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பது தெரிந்தது. மேலும் சிறுமிகள் தங்களது தகவல் குறித்து மாறி, மாறி கூறுவதால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.



 

சிசிடிவி ஆய்வு

 

சிறுமிகளை அழைத்து வந்தது அவருடைய தாய் ரம்யாதானா அல்லது வேறு யாராவது என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா  காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் மாயமான இளம்பெண் 2 குழந்தைகளுடன் வருவது பதிவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள்.   இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் சென்னை பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : மீட்கப்பட்ட சிறுமிகள்  தங்களது தாயுடன் வந்ததாகவும், சொந்த ஊர் வேலூர் எனவும் தெரிவித்தனர். ஆனால் வேலூரில் சிறுமிகள் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. சிசிடிவி காட்சிகளில் பதிவான பெண் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.