சென்னைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு உட்பட 2, 4, 6ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகததால், உயர் கல்வியில் சேர முடியாமலும் வேலைக்குச் செல்ல முடியாமலும் மாணவர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகம் பாரம்பரியம் வாய்ந்த தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கினார்.
ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள்
இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளாக மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான 2, 4 மற்றும் 6ஆம் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகாத நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக ஆஃப்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்றன. இரண்டு ஷிஃப்டுகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தலா 3 மணி நேரம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன.
வழக்கமாக விடைத் தாள்கள் 4 முதல் 6 வாரங்களில் திருத்தப்பட்டு, வெளியாகும். இதனால், ஜூன் மாதம் 2 ஆவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதமே முடியப் போகும் சூழலில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கவலையில் தேர்வர்கள்
தேர்வு முடிவுகள் வெளியாகாதது குறித்து, ’’சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரி இளங்கலை மாணவி விலாசினி ABP Nadu-விடம் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''இளங்கலை மூன்றாம் ஆண்டு, 6ஆவது செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளேன். விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எண்ணி, பெங்களூருவில் உயர் கல்விக்குச் சேர விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
என்னுடைய நண்பர்கள் சிலர் வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அவர்களால் நிறுவனங்களில் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முடியவில்லை. எங்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதால் சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தாமதமாகும் தேர்வு முடிவுகள்
ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் 1, 3 மற்றும் 5ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் தாமதமாகவே வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக வட்டாரத்தில் ABP Nadu சார்பில் விசாரித்தோம். விடைத் தாள் திருத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாட விடைத் தாள்களைத் திருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். விரைவில் சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.