மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் பல சுற்றித்திரிந்து குடியிருப்பு வாசிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இன்னல்களை கொடுத்து வந்தது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் இது குறித்த சீர்காழி நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட சீர்காழி நகராட்சி ஆணையர் புகாரின் பேரில் சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார். 




அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து சீர்காழியில் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு தொந்தரவாக சுற்றித்திரிந்த  20 க்கும் மேற்பட்ட பன்றிகளைப் பிடித்தனர். இதனால் பன்றி பிடிப்பில் ஈடுப்பட்ட நகராட்சி ஊழியர்களுக்கும், பன்றி வளர்ப்போருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனையடுத்து இரு தரப்பினரையும் சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்திருந்தனர். 




அப்போது காவல் நிலையம் வந்தவர்கள், காவல்நிலையம் என்றும் பாராமல் காவல்நிலைய வாசலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் பன்றி வளர்க்கும் தரப்பை சேர்ந்தவர்கள் கத்தியால் வயிற்றில் குத்தியதில்  மயிலாடுதுறை நகராட்சி ஊழியர் சங்கிலி கருப்பன் காயமடைந்தார். சப்தம் கேட்டு காவல்நிலையத்தில் உள்ளே இருந்து  வந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் விலக்கி  காயமடைந்த ஊழியரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சீர்காழியை சேர்ந்த மாரிமுத்து,கார்த்திக், ஐயப்பன் ஆகிய உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி காவல் நிலையம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் இருதரப்பினர் இடையே நடைபெற்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாங்கிக்கொள்வதும், அதனை காவல்துறையினர் தடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது.




இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சமீப காலமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வெட்டு,குத்து, அடிதடி  அதிகரித்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த போது அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இல்லாத நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை என ஏராளமான குற்றச்செயல் நடைபெற்று பல வழக்குகள் பதிவாகின. இதனால் கள்ளச்சாராயம் தொடர்பாகவும், தற்போது அரசால் சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களுக்கும், அதனை எதிர்க்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இந்த இரு பிரச்சினைகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டத்தில் மீதம் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் போதிய காவலர்கள் இன்றி கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் கூடுதல் காவலர்களை நியாயம் செய்து மாவட்டத்தில் உள்ள காவலர் காலி பணியிடங்களை விரைவில் நிரப்பி குற்ற சம்பவங்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.