டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் ரெபிட் மற்றும் பிரிசிஷன் என்ற இரண்டு தகுதிச் சுற்றுகள் உள்ளன. இந்தப் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று பிரிசிஷன் பிரிவு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் பிரிசிஷன் தகுதிச் சுற்றில்  ராஹி சர்னோபட்  287 புள்ளிகள் எடுத்தார். அத்துடன் அவர் 25ஆவது இடத்தையும் பிடித்தார்.  மனு பாக்கர் பிரிசிஷன் தகுதிச் சுற்றில்  மொத்தமாக  292 புள்ளிகள் எடுத்தார். அவர் 5ஆவது இடத்தை பிடித்தார்.


இந்நிலையில் இன்று ரெபிட் பிரிவு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ராஹி சர்னோபட் 96,94,96 என மொத்தமாக 286 புள்ளிகள் பெற்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இரண்டு தகுதிச் சுற்றுகளிலும் சேர்த்து ராஹி சர்னோபட் 573 புள்ளிகள் பெற்றார். இதனால் அவர் 33ஆவது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் ரெபிட் பிரிவு தகுதிச் சுற்றில் 96,97,97  என மொத்தமாக 290 புள்ளிகள் எடுத்தார். இரண்டு தகுதிச் சுற்றுகளிலும் சேர்த்து மனு பாக்கர் 582 புள்ளிகள் எடுத்தார். இதனால் அவர் முதல் 8 இடங்களுக்குள் வரும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். எனவே இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதிச் சுற்றுடன் வெளியேறி பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.






முன்னதாக ஆடவர் மற்றும் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஆகிய இரண்டு போட்டிகளிலும் இந்தியாவிற்கு பெரிய ஏமாற்றமே அமைந்தது. இந்த இரண்டு பிரிவிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. சவுரப் சௌதரி மட்டும் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆறுதல் அளித்தார். அதன்பின்னர் நடைபெற்ற கலப்பு பிரிவிலும் இந்திய ஜோடிகள் யாரும் பதக்கம் வெல்லவில்லை. மனு பாக்கர் மற்றும் சவுரப் சௌதரி மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். அவர்களும் இறுதியில் 7ஆவது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைஃபிள் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் எதுவும் கிடைக்காதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: 3000 மீட்டர் ஸ்டீப்புள்சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த அவினாஷ் சேபிள்