ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில், ஏபிபி தேசம் (ABP Desam) என்ற ஆன்லைன் டிஜிட்டல் செய்தி செய்தி தளம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
பன்முகத் தன்மை கொண்ட நம் நாட்டில் பிராந்திய ரீதியிலனா டிஜிட்டல் செய்தி தளத்தின் பங்கு அளப்பரியதாகும். மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களின் மொழியிலே செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை ஏபிபி தேசம் தாரக மந்திரமாக கொண்டுள்ளது. இதன்மூலம், விளிம்புநிலை மக்களுக்குத் தேவையான தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என ஏபிபி தேசம் உறுதியுடன் நம்புகிறது. ' எங்கள் வட்டார மொழியில், எங்கள் செய்தி' என்பதே ஏபிபி தேசத்தின் தாரக மந்திரம் ஆகும்.
மக்களுக்குத் தேவையான தகவல்களை அவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் மேம்படுத்துவதில் ஏபிபி நெட்வொர்க் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும், திறந்த மற்றும் வெளிப்படையான சமூகத்தை உருவாக்கும் வகையில் தேசநலன் சார்ந்த பிரச்சனைகளை ஏபிபி நெட்வொர்க் முன்னெடுத்து வருகிறது. ஏபிபி தேசமும் இந்த பாதையில் தொடர்ந்து சரியாக செயல்படும்.
ஏபிபி நெட்வொர்க் பல்வேறு பிராந்திய மொழிகளில் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ஏபிபி ஆனந்தா (மேற்குவங்கம்) , ஏபிபி மஜா (மகாராஷ்டிரா), ஏபிபி அஸ்மிதா (குஜராத்) , ஏபிபி சஞ்சா (பஞ்சாப் ), ஏபிபி கங்கா ( உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) , ஏபிபி பீகார் (பீகார் ), ஏபிபி நாடு (தமிழ்நாடு) என்று மேற்கண்ட மாநிலங்களில் பிராந்திய சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேற்கூறிய செய்தி தளங்கள் அந்தந்த கலாச்சாரம், மொழி பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் கூடுதலான பார்வையை செலுத்தி வருகின்றன. இதன்மூலம், சந்தையில் தங்களுக்கென்று ஒரு தனிச்சிறப்பான இடத்தை ஏபிபி உருவாக்கியுள்ளது.
ஏபிபி நெட்வொர்க் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே இதுகுறித்து கூறுகையில், "டிஜிட்டல் செய்தி தளத்தில் பிராந்திய மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில், தமிழ் வாசர்களுக்காக ஏபிபி நாடு என்ற தளத்தை தொடங்கினோம். அடுத்தக்கட்ட முயற்சியாக ஏபிபி தேசம் தொடங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஏபிபி தேசமும் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும்" என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.