மும்பை அந்தேரி பகுதியில் இயங்கி வரும் ஹோட்டல் விடுதி அறையில் 30 வயது பெண் மாடல் ஒருவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் கடந்த புதன்கிழமை (செப்.28) இரவு 8 மணியளவில் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியதோடு இரவு உணவையும் ஆர்டர் செய்துள்ளார்.
தொடர்ந்து வியாழக்கிழமை (செப்.29) விடுதி ஊழியர்கள் பலமுறை கதவைத் தட்டியும், ஃபோனில் அழைத்தும் அவர் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, விடுதி மேலாளர் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், மாஸ்டர் சாவியை வைத்து அறையை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது மாடல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், "மன்னிக்கவும். என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி தேவை" என எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தேரி பகுதி காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சினைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை