சென்னை, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அருகே உள்ள ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47) . கட்டட மேஸ்திரியான இவருக்கு பெரியநாயகி (38) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இச்சூழலில் நேற்று முன்தினம் (செப்.26) காலை 8 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்ற நிலையில், ஜெயபால் மட்டும் வீட்டில் மது அருந்திவிட்டு தனியாக இருந்து உள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் இருவரும் வெகு நேரமாக கூப்பிட்டும் ஜெயபால் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தபோது ஜெயபால் ஹாலில் புடவையால் தூக்கில் கொண்டிருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ந்துள்ளனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலைக் கீழே இறக்கி கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் காவலர்கள் ஜெயபாலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ஜெயபாலின் இடது கண் மற்றும் தொடைப் பகுதிகளில் லேசான காயம் இருந்ததை கவனித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டநிலையில், ஜெயபாலின் கழுத்தின் அருகே இருந்த காயங்களைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மற்றும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான காவலர்கள் தற்கொலை வழக்கை தீவிரமாக விசாரித்தனர்.
அவர், தூக்கில் தொங்கியபோது முதலில் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் (40), கொடுங்கையூர் சேலைவாயில் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) ஆகிய இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து காவலர்கள் சுதாரித்து தீவிர கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், ஜெயபால் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது தெரிய வந்தது. ஜெயபாலின் பக்கத்து வீட்டுக்காரரான ஆறுமுகம் என்பவரும் கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்த நிலையில், ஆறுமுகத்தை விட ஜெயபால் கூலி குறைவாக வாங்கி வந்துள்ளார். இதனால் பெரும்பாலான வேலைகள் ஜெயபாலுக்கு கிடைத்ததை அடுத்து ஆத்திரமடைந்த ஆறுமுகம், மது போதையில் ஜெயபால் வீட்டுக்குச் சென்று கைகளாலேயே அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து அவரை வீட்டில் இருந்த புடவையால் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டது போன்று செட்அப் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் இந்தக் கொலையில் ஆறுமுகத்துக்கு உறுதுணையாக இருந்தாரா இல்லையா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறுமுகம், ரமேஷ் ஆகிய இருவரிடமும் கொடுங்கையூர் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.