2020-2021 ஆம் காலக்கட்டம் உலகின் பொருளாதார சந்தைகளையே திருப்பி போட்டுவிட்டது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது விமானத்துறைகள்தான். சில விமான நிறுவனங்கள் மக்களில் அதிருப்திக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானது. ஆனால் அந்த காலக்கட்டத்தையும் முறையாக சமாளித்து , மக்களின் ஆதரவை பெற்ற விமான நிறுவனமாக கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விமான சேவைக்கான Skytrax World Airline Awards வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Skytrax என்பது லண்டனை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய மதிப்பாய்வு மற்றும் தரவரிசை தளம் ஆகும். இந்த நிறுவனம் உலகின் தற்போதைய விருப்பமான விமான நிறுவனத்தைக் கண்டறிய, செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் ஆய்வுகளை நடத்தியது. அதில் சிறந்த வணிக வகுப்பு, சிறந்த இருக்கை உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதால் , கத்தார் ஏர்லைன்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கத்தார் ஏர்லைன்ஸ் முதல் இடத்தை பிடிப்பது இதுவொன்றும் முதல் முறையல்ல , 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக Skytrax World Airline Awards அறிவிக்கப்பட்டதில் இருந்து 7 முறை முன்னிலையில் இருந்திருக்கிறது.
இது குறித்து கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர், "இந்த விருது ஊழியர்கள் அர்பணிப்பிற்கான பரிசு ! நாங்கள் 25 வது ஆண்டில் பயணிக்கும் அதே நேரத்தில் இந்த விருது கிடைத்திருப்பத்து உந்துதலாக இருக்கிறது..சீரான சேவை, சீரான தயாரிப்பு, பயணிகளிடம் சீரான கவனம் மற்றும் விமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரின் முழுமையான அர்ப்பணிப்புதான் எங்கள் வெற்றியின் ரகசியம் “ என்றார்.
Skytrax World Airline விருதை பெறும் 20 சிறந்த விமான சேவைகள் இதோ :
- கத்தார் ஏர்வேஸ்
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
- எமிரேட்ஸ்
- ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA)
- குவாண்டாஸ் ஏர்வேஸ்
- ஜப்பான் ஏர்லைன்ஸ்
- துர்க் ஹவா யோலாரி (துருக்கி ஏர்லைன்ஸ்)
- ஏர் பிரான்ஸ்
- கொரியன் ஏர்
- சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்
- பிரிட்டிஷ் ஏர்வேஸ்
- எதிஹாட் ஏர்வேஸ்
- சீனா சௌதர்ன்
- ஹைனன் ஏர்லைன்ஸ்
- லுஃப்தான்சா
- கேத்தே பசிபிக்
- கேஎல்எம்
- ஈ.வி.ஏ ஏர்
- விர்ஜின் அட்லாண்டிக்
- விஸ்தாரா
சேவையின் அடிப்படையில் விருது வென்ற ஏர்லைன்ஸ் :
உலகின் சிறந்த கேபின் ஊழியர்கள்- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
உலகின் சிறந்த விமான கேபின் தூய்மை - ANA (ஆல் நிப்பான் ஏர்வேஸ்)
உலகின் சிறந்த சுதந்திர விமான நிலைய லவுஞ்ச்- பிளாசா பிரீமியம்
உலகின் சிறந்த வணிக வகுப்பு லவுஞ்ச் - விர்ஜின் அட்லாண்டிக்
உலகின் சிறந்த ஓய்வு விமான நிறுவனம்- சன் எக்ஸ்பிரஸ்
உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்/ஆசியாவிலேயே சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் - ஏர் ஏசியா
ஐரோப்பாவில் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்- ரியானேர்
வட அமெரிக்காவில் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்- சௌதர்ன் ஏர்லைன்ஸ்
ஆப்பிரிக்காவில் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் - ஃபிளை சஃபார்
உலகின் சிறந்த நீண்ட தூர குறைந்த கட்டண விமான நிறுவனம்- ஸ்கூட்
உலகின் சிறந்த வகுப்பு கொண்ட ஏர்லைன்ஸ்
உலகின் சிறந்த முதல் தர விமான நிறுவனம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
உலகின் சிறந்த வணிக வகுப்பு விமான நிறுவனம்: கத்தார் ஏர்வேஸ்
உலகின் சிறந்த பிரீமியம் எகானமி கிளாஸ் ஏர்லைன்ஸ்: விர்ஜின் அட்லாண்டிக்
உலகின் சிறந்த பொருளாதார வகுப்பு விமான நிறுவனம்: எமிரேட்ஸ்