கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதமானது 5.90 சதவீதமாக உயர்கிறது. 


இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் கடந்த புதன்கிழமை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக , ரூபாய் மதிப்பை வலுப்படுத்து, பணவீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.






ரெப்போ வட்டி விகிதம் உயர்வு:


ரிசர்வ் வங்கி இதர வங்கிகளுக்கு வழங்கக் கூடிய குறுகிய கால கடனானது ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கக் கூடிய குறுகிய கால கடன்களுக்கான ( ரெப்போ வட்டி விகிதம்) உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


இந்த முடிவானது ஆர்.பி.ஐ., வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் உள்ள உறுப்பினர்களின் 6ல் 5 உறுப்பினர்கள் உயர்த்தப்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.






இதையடுத்து ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ரெபோ வட்டி விகிதமானது 5.40 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் உயர்ந்து 5.90சதவீதமாக உள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வானது ஜூன் மாதத்திலிருந்து 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் எஸ்டிஎஃப் விகிதம் 5.65 சதவீதமாகவும், எம்.எஸ்.எஃப் மற்றும் வங்கி விகிதம் 6.15 சதவீதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .


வட்டி விகிதம் உயரும் அபாயம்:


ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காராணமாக வீட்டு கடன், தனி நபர் கடன் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


உலக முழுவதும் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால், கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்து பெரும் சரிவை சந்தித்தன. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு பெரும்  சரிவை கண்டு 81 ரூபாய்க்கு மேல் சென்றன.






இந்நிலையில் ரூபாயின் மதிப்பை வலுபடுத்தும் வகையிலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.