இந்தியாவில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பல சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் சம்பவங்களும், ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் மாயமாகிய அவ்வப்போது வெளியாகும் ஆய்வு முடிவுகளும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆளாக்கி வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்ட்ராவில் அரங்கேறிய சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


பாத்ரூமில் அடைபட்ட 10 வயது சிறுமி:


மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள முக்கிய நகரம் நாக்பூர். இங்குள்ள பெசா – பிப்லா சாலையில் உள்ள அதர்வா நக்ரியில் மிகப்பெரிய அபார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் அதை காலி செய்து விட்டு சென்றுள்ளனர்.


அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் மின்கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பை துண்டிக்க மின்சார ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது, அந்த வீட்டின் உள்ளே இருந்து குரல் ஒன்றும், கை ஒன்று அசைவதும் தெரிந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அருகே சென்றபோது, சிறுமி ஒருவர் உதவிக்காக அலறும் சத்தம் கேட்டுள்ளது.


உடலில் காயம்:


உடனடியாக அவர்கள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வருவதற்கு முன்பே கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர், பாத்ரூமில் சிறுமி அடைபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பாத்ரூம் கதவை திறந்து சிறுமியை மீட்டனர்.


போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது. 10 வயதே நிரம்பிய அந்த சிறுமி கடந்த 5 நாட்களாக அந்த பாத்ரூமில் அடைபட்டு கிடப்பதாகவும், சாப்பிடுவதற்காக வெறும் ப்ரெட் பாக்கெட் மட்டும் கொடுத்துவிட்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 5 நாட்களாக உயிருக்காக போராடிய சிறுமி கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர், உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையிலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. சிறுமியின் அந்தரங்க பகுதி உள்பட பல இடங்களில் காயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.


உடனடியாக சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணம் ஆனவர்கள் யார்? என்பதை போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். போலீசார் விசாரணையில் அந்த வீட்டில் வசித்து வந்த தம்பதி தஹா அர்மான் இஸ்தியாக் கான் என்றும், அவரது மனைவி ஹினா என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் வைத்து தஹா அர்மானை போலீசார் கைது செய்தனர்.


ஆள்கடத்தில், பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: திருமண அழைப்பிதழில் பெயர் போடாத தாத்தாவை வெட்டிக்கொன்ற பேரன் - நிலக்கோட்டையில் அதிர்ச்சி


மேலும் படிக்க: கரூரில் பயங்கரம்....தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் தாக்கி கொலை - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு