ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபுள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் காரின் சாவியை ரஜினிகாந்திடம் ஒப்படைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்தது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.


மேலும் இதுவரை சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரஜினிகாந்தை சந்தித்த கலாநிதி மாறன் காசோலை ஒன்றை பரிசாக வழங்கினார். அதைத்தொடர்ந்து ரஜினிக்கு சொகுசு காரான பிஎம்டபுள்யூ காரின் லேட்டஸ்ட் மாடல் காரை பரிசளித்துள்ளார்.


பல மாடல் கார்களை ரஜினியிடன் காட்டியதாகவும் BMW X7 மாடலை ரஜினி தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த BMW X7 காரின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ஆகும். 6 சீட்டர் காரான இது, 2993 சிசியில் ஒரு டீசல் எஞ்சினையும், 2998 சிசியில் பெட்ரோல் என்ஜினையும் கொண்டது. மேலும் எரிபொருளின் தன்மையைப் பொருத்து 11.29 to 14.31 kmpl வரை மைலேஜ் தரும். இந்த கார் 5181mm நீளம், 2218 mm அகலம் மற்றும் 3105 mm வீல் பேஸ் கொண்டது. 


மேலும் இந்தக் காரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் துப்பாக்கி குண்டு, வெடி குண்டு போன்றவை ஊடுருவி உள்ளே செல்லாத வகையில் புல்லட்ப்ரூஃப் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய VR9 பாதுகாப்பு சான்றிதழை இக்கார் பெற்றுள்ளது.


இதன் டயர்களும் அதிக பாதுகாப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 இன்ச் மிச்செலின் PAX புல்லட் ப்ரூப் டயர் பொருத்தப்பட்டுள்ளது. எனவே டயர்கள் பஞ்சர் ஆகாது. டயரில் காற்றே இல்லாமல் கூட இந்தக் கார்கள் 80KMPH வேகத்தில் செல்லும்.


 






மேலும் கூடுதல் வசதிகளாக ஏர் சப்ளை சிஸ்டம், தீ விபத்து ஏற்பட்டால் தானாக அல்லது மேனுவல் முறையிலும் தீயை அணைக்கும் வசதி, பிளாஷ் லைட், ரேடியோ வசதி என பல அம்சங்கள் இந்தக் காரில் உள்ளது. பல சோதனைகளுக்குப் பிறகு BMW நிறுவனம் இந்த X7 காரை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தக் கார் உலகின் முக்கிய பிரபலங்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.