Kanimozhi MP Letter : டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்
பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதில் பல மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல வந்த, ஆம்புலன்ஸ் மீது கூட அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கண்டனம்
இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
”ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மார்க்ஸ், பெரியார் படங்களை சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையை தடுக்க தவறியதுடன் பார்வையாளர்கள் போன்று டெல்லி போலீசார் இருந்ததாக” கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் ஜே.என்.யு. போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பினரின் வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க