சியோல் உயர் நீதிமன்றம் நேற்று, மாநிலத்தின் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதியின் வாழ்க்கைத் துணைக்கு சுகாதார காப்பீட்டு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தென் கொரியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதியினருக்கு முதல் சட்ட அங்கீகாரம் கிடைத்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.  தேசிய சுகாதாரக் காப்பீட்டுச் சேவையால் பிற பொதுவான தம்பதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு கிடைக்காது என்ற கீழ் நீதிமன்றத் தீர்ப்பை இந்தத் தீர்ப்பு ரத்து செய்துள்ளது.


சோ சங்-வூக் மற்றும் கிம் யோங்-மின் தம்பதியின் வழக்கறிஞர் ரியூ மின்-ஹீ, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு " தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதியினரின் சட்டபூர்வமான முதல் அங்கீகாரம்" எனக் குறிப்பிட்டார்.  சோ சங்-வூக் மற்றும் கிம் யோங்-மின் தம்பதியினர் கூறுகையில்: "நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வெற்றி மட்டுமல்ல, கொரியாவில் உள்ள பல தன்பாலின ஈர்ப்பாளர்கள் தம்பதிகள் மற்றும் LGBTQ குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்" என தெரிவித்தார். 


வழக்கில் வாதிட்ட சோ சங்-வூக், 2021 இல் தேசிய சுகாதாரக் காப்பீட்டுச் சேவைக்கு எதிராக, கணவன்-மனைவி நலன்கள் மறுக்கப்பட்ட நிலையில் வழக்குத் தொடர்ந்தார், ஆனால் கீழ் நீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பாளர்களை தம்பதியினராக கருத முடியாது என்ற அடிப்படையில் காப்பீட்டாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.  ரியூவின் கூற்றுப்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம், மாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்பங்களுக்கானது மட்டுமல்ல, தன்பாலின ஈர்ப்பாளர்களிக்கு உரிமைகளை வழங்காதது பாகுபாடு என்றும் கூறியது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது மனித உரிமைகளின் கடைமையாகும், இதுவே தலையாய கடமை என்று நீதிமன்றம் மேலும் கூறியது.


உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தேசிய சுகாதாரக் காப்பீட்டுச் சேவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் அரசியலமைப்பு விவகாரங்களில் மேல்முறையீடுகளை விசாரிக்கும் அரசியலமைப்பு நீதிமன்றமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. " தென் கொரியாவில், திருமண சமத்துவத்தை அடைவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் கிழக்கு ஆசிய ஆராய்ச்சியாளர் போரம் ஜாங் கூறினார், இது LGBT சமூகத்திற்கு எதிரான பாரபட்சம் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.